“REMEMBER”: உங்கள் குழந்தைகளை கோவிட்19 தொற்று நோய் சமயத்தில் சமாளிக்க வழிமுறை.

Hesham Hamoda, MD, MPH
Staff Psychiatrist, Boston Children’s Hospital
Assistant Professor, Harvard Medical School

Illustrations by: Dr. Serag Eldin Kamel

TRANSLATED BY: DIVYA SWAMINATHAN (MASLP) AND DR SOWMYASHREE MAYUR KAKU (MBBS, PH.D), BANGALORE, INDIA

வேர்ல்ட் ஹெல்த் ஆர்கனைசேஷன் (WHO) 135 நாடுகளில் கோவிட் 19 (COVID-19) தொற்று நோய் பரவி உள்ளதாகவும் , இது மேலும் பரவக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது. இந்த நோய் உலகமெங்கும் உள்ள லட்சக்கணக்கான குழந்தைகளின் இயல்பு வாழ்க்கையை பல விதங்களில் பாதித்துள்ளது. இந்த சூழ்நிலையில் பெற்றோர் ஆன நீங்கள் மிகவும் கவலை அடைந்து இருக்கிறீர்களா? கவலை வேண்டாம்; உங்களுக்கு உறுதுணையாக நாங்கள் இருக்கிறோம்.. இந்த சவாலான நேரத்தில் நீங்கள் உங்கள் குழந்தைகளை அரவணைத்து வழிநடத்த சில சுலபமான வழிமுறைகளை நாங்கள் ‘நினைவில் இருக்கட்டும் (“REMEMBER”) என்ற தலைப்பில் இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

(REMEMBER) நினைவில் இருக்கட்டும்

1. Reassure (நம்பிக்கை ஊட்டுங்கள்): தொற்று நோயின் (கோவிட் 19) தாக்கத்தைப் பற்றிய உண்மைகளை குழந்தைகளுக்கு விளக்குங்கள்.அதே சமயம் அவர்களுக்கு நீங்கள் உறுதுணையாக நின்று பாதுகாப்பு அளிப்பீர்கள் என்பதை உணர்த்தவும்.அதிர்ஷ்டவசமாக குழந்தைகளுக்கு இந்நோயின் தாக்கம் குறைவாகவே இருக்கும் என்று தற்போதைய செய்திகள் கூறுகின்றன.

2. Empower (குழந்தைகளை ஊக்கப்படுத்துங்கள்): குழந்தைகளின் மனித நேயப்பண்புகளை வளர்ப்பதற்கு இது நல்ல வாய்ப்பாகும்.நோயாளிகளைக் காப்பாற்றப் போராடும் டாக்டர்கள், நர்ஸ்கள் போன்றவர்களுக்கு நன்றி கூறும் அட்டைகளை அவர்களை தயாரிக்கச்சொல்லுங்கள்(இந்த அட்டைகளை பின்னர் அவர்களுக்கு அனுப்பலாம்). அக்கம்பக்கத்தில் உள்ள முதியவர்களுடன் போனில் பேசி அவர்களை உற்சாகப்படுத்தலாம்.தங்களுடைய சேமிப்பில் ஒரு பங்கை நிவாரண நிதிக்குக் கொடுக்க குழந்தைகளை ஊக்குவிக்கலாம். 

3. Maintain your own calm (நீங்கள் உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி அமைதியாக இருங்கள்): வாயால் சொல்வதை விட நீங்கள் செயலில் காண்பிக்கும்போது குழந்தைகள் உங்களை முழுமையாகப் பின்பற்றுவார்கள்.எனவே நீங்கள் உங்கள் மன அழுத்தத்தை அமைதியாகக் கையாண்டால் குழந்தைகளும் பின்பற்றுவார்கள். 

4. Engage them (ஆர்வம் ஊட்டுங்கள்): குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வீட்டிலேயே ஒன்றுகூடி நேரத்தைத் தரமாக செலவிட இது நல்ல வாய்ப்பாகும். குழந்தைகளுடன் நீங்கள் வீட்டிலேயே செஸ், கேரம், போர்டு கேம் போன்றவற்றை விளையாடலாம்.மேலும் அவர்களுக்கு சமைக்க, துணி தைக்கக் கற்றுக்கொடுக்கலாம்.சுறுசுறுப்பாக இருக்க எல்லாரும் சேர்ந்து வீட்டிலேயே டான்ஸ் ஆடலாம்.

5. Manage their emotions (குழந்தைகளின் உணர்ச்சிகள்): குழந்தைகள் பள்ளிக்குச்செல்லாமல் இருப்பதாலும் நண்பர்களிடமிருந்து பிரிந்து வீட்டிலேயே இருப்பதாலும் பல்வேறு உணர்ச்சிகளுக்கு ஆளாகிறார்கள். இந்தத் தொற்றுநோய் பற்றிய கேள்விகளைக் கேட்க வாய்ப்பளியுங்கள்.அவர்களுடன் கலந்து உரையாடி அவர்களின் சந்தேகங்களை போக்குங்கள். உங்களுக்கு சில விடைகள் தெரியாமல் இருந்தாலும் அவர்களைக் கேள்வி கேட்க வாய்ப்பளிப்பதே நன்மை பயக்கும்.மன அழுத்தத்தில் இருந்து விடுபட மூச்சுப்பயிற்சி (பிராணாயாமம்) மற்றும் தியானம் போன்றவற்றைக் கற்றுக்கொடுக்க இது ஒரு நல்ல வாய்ப்பாகும். 

6. Beware (எச்சரிக்கை): டெலிவிஷன் போன்ற ஊடகங்களில்(மீடியா) கூறப்படும் அனைத்தும் முற்றிலும் நம்பத்தக்கவை அல்ல. குழந்தைகள் கள்ளம் கபடம் அற்றவர்கள். எனவே அவர்களின் டெலிவிஷன் நேரத்தைக் கட்டுப்படுத்தி கண்காணியுங்கள்.

7. Educate them (குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்): அடிக்கடி கை கழுவுதல், வாயைக் கையால் மூடிக்கொண்டு தும்முதல், இருமுதல் போன்ற சுகாதார நடவடிக்கைகளை குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க இது நல்ல வாய்ப்பாகும். மேலும் தொற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஒரு விஞ்ஞானி அல்லது டாக்டர் பற்றி அவர்களுக்கு விளக்கினால் நாளை அவர்களும் ஒரு விஞ்ஞானியாகவோ டாக்டராகவோ உருவாகலாம். மேலும் நர்ஸ் மற்றும் தூய்மைப்பணியாளர்களின் சேவைகளின் மகத்துவத்தை விளக்கினால், அவர்களும் நாளை சேவைப்பணியை விரும்பலாம். 

8. Routines (தினசரி நடைமுறை): எல்லாரும் சேர்ந்து சாப்பிடுவது, தூங்கப்போகும் முன் கதை சொல்லுவது போன்ற தினசரி நடைமுறைகளை விடாது கடைப்பிடியுங்கள்.குழந்தைகளை தினமும் எளிய உடற்பயிற்சியை செய்யச்சொல்லுங்கள். அதேசமயம் அவர்களை அவ்வப்போது தண்ணீர் குடிக்க வற்புறுத்துங்கள். திறந்த வெளியில் ( மொட்டை மாடி, பால்கனி, வீட்டின் பின்புறம் ) சிறிது நேரம் விளையாடுவது அவர்களுக்கு நல்ல உற்சாகத்தைக் கொடுக்கும்.